முதல்வரின் பாராட்டை பெற்ற நெல்லை துணை ஆணையர் சரவணன்...! யார் இவர்?
காவல்துறை மக்களின் நண்பன் என்பதற்கு உதாரணமாக நெல்லை துணை ஆணையர் சரவணன் செயல்பாடு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். அவர் ஆற்றிவரும் பணியை நெல்லை மக்கள் பாராட்டி வந்த நிலையில் முதலமைச்சரும் பாராட்டி உள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக கடந்த ஆண்டு பணியிட மாறுதலில் வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜுன் சரவணன். சென்னை போன்ற பெருநகரங்களில் பணிபுரிந்து இருந்தாலும், உணர்ச்சிகளுக்கு அதிக இடம் அளிக்கும் நெல்லை வாழ் மக்களிடம் அன்பான அணுகுமுறையாலும், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பேசும் பேச்சினாலும், கொடுக்கும் புகார்கள் மீதான உடனடி நடவடிக்கையாலும் மனங்கவர்ந்த அதிகாரியாக மாறியிருக்கிறார்.
காவல்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் தாண்டி பொதுமக்களின் பல்வேறு நலன் சார்ந்த, சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளில் தலை காட்டி தன் முத்திரையைப் பதித்து வருபவர் அர்ஜூன் சரவணன். தினந்தோறும் இவரது பணிப்பதிவேட்டில் ஆக்கிரமித்திருக்கும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இளைஞர்கள், மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளாக இருக்கும்.
சமூக வலைதளங்களை எப்படி கையாள்வது என்பது இவருக்கு கைவந்த கலை. மாநகர காவல் துறை மூலம் போக்குவரத்தில் பல்வேறு விழிப்புணர்வு மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர். ஹெல்மெட் அணிவதால் உயிர் இழப்பைத் தவிர்க்கலாம் என்பது குறித்து தொடர்ச்சியாக பல்வேறு நூதனமான வழிமுறைகள் வாயிலாக பரப்புரை மேற்கொண்டவர்.
விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட உச்ச நச்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது அவர்களின் ரசிர்களை கட்அவுட் வைக்க விடாமல், ஹெல்மெட் வழங்கி உதவிகள் செய்ய வைத்து பாராட்டு பெற்றவர். நெல்லை மாநகருக்கு வரும்போது துணை ஆணையர் சரவணனை ட்விட்டரில் இரண்டாயிரம் பேர் பின் தொடர்ந்தனர். அது இன்று 20 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளதற்கு அவரின் செயல்பாடே காரணம்.
நேரடி புகார் மட்டுமல்லாமல், ட்விட்டர், ஃபேஸ்புக், ஹலோ ஆப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் கேட்கும் உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுக்கும் வகையில் தனது பணியை மாற்றிக் கொண்டார். சாதாரண நாட்களில் மக்கள் நலப்பணி செய்தவர் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் மக்களுக்கு தேவையான பல்வேறு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி சமூக வலைதளங்களில் இயங்காதவர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே கொண்டு சென்று கொடுக்கும் வகையில் தன்னார்வலர்கள் மூலமாகவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். ட்விட்டரில் கேட்டுக்கொண்டுதன் பேரில் சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்தார்.
நெல்லையில் மருந்து கிடைக்காதவருக்கு பிற மாவட்டங்களில் இருந்து மருந்து வாங்கிக் கொடுத்தார். வளர்ப்பு பிராணிகளுக்கு உணவு இல்லை என்றபோது, அதையும் வாங்கிக்கொடுத்து அசத்தினார். நெருக்கடியான காலம் இதில் அரசின் கோரிக்கையை ஏற்று மக்கள் வீட்டிலேயே இருக்கும்போது, அவர்களுக்கு தேவையானதை அரசு நிர்வாகம் சார்பில் செய்வது கடமை என நினைத்து செய்வதால் மக்கள் மனங்களை வென்றுள்ளார் சரவணன்.
காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக தங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பானதாக உள்ளது.
சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்காக ஓடோடி உதவும் தங்களின் பணி சிறக்கவும், சேவை தொடரவும் எனது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்
துணை ஆணையர் சரவணனின் செயல்பாடுகள் மக்களால் பாராட்டப்பட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பாராட்டியுள்ளார். முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக துணை ஆணையர் சரவணனின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பானதாக உள்ளதாக பாராட்டியுள்ளார்.
சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்காக ஓடோடி உதவும் சரவணனின் பணி சிறக்கவும், சேவை தொடரவும் தனது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும் என முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
காவல் துணை ஆணையராக தனது பணி மட்டுமல்லாமல், மக்களுக்கு எந்த உதவிகள் தேவை என்றாலும் அரசின் பிரதிநிதியாக ஓடோடி செய்யும் சரவணன் போன்றோரின் பணி உண்மையில் அனைவரும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
Comments
Post a Comment